திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தாங்களே தீபம் ஏற்றி கொள்கிறோம் என கிராம மக்கள் கோயில் நிர்வாகத்திடமும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற, உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அதனை, அமல்படுத்த கோரி, திருப்பரங்குன்றம் கிராம சபை, திருப்பரங்குன்றம் பூர்வீக மிராஸ் வகையறாக்கள் சார்பில் கோயில் நிர்வாகத்திடமும் ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.
அதில், தங்கள் முன்னோர்கள் வழிபட்ட மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும், ஆனால் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் எந்தவொரு பிரச்சினையும் வரப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
தங்கள் கோரிக்கையை ஏற்று முன்னோர்கள் வழிபட்ட பாரம்பரிய தீபத்தூணில் உயர் நீதிமன்ற உத்தரவின் படி தீபம் ஏற்றி நிரந்தர தீர்வு காணுமாறும் வலியுறுத்தியுள்ளனர். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் அறநிலையத் துறைக்கு சிரமம் என நினைத்தால் தாங்களே தீபம் ஏற்றிக் கொள்கிறோம் எனவும் கூறியுள்ளனர்.
















