திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத திமுக அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாகச் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே, 500-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல குழுக்களாகப் பிரிந்து சென்று கண்டன கோஷங்களை எழுப்பிய இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் போலீசாருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற 1996-ம் ஆண்டு வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரி, இந்து முன்னணி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
















