சுற்றுலா பயணிகளைச் சுண்டி இழுக்கும் கோவாவில், கேளிக்கை விடுதியில் நடந்த தீவிபத்து சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 25 பேரது உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில் அங்கு என்ன நடந்தது. பலர் உயிரிழக்க காரணம் என்ன? என்பதை பற்றித் தற்போது பார்க்கலாம்.
குதூகலமான கொண்டாட்ட சூழலுக்குப் பெயர் போன கோவா, சுற்றுலா பயணிகளை முற்றிலும் வேறு உலகத்திற்கே அழைத்துச் சென்றுவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த அளவுக்குச் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கோவாவில், கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வடக்கு கோவாவின் அர்போராவில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் இரவு விடுதியில்தான் அந்த அசம்பாவித சம்பவம் நடந்திருக்கிறது.
முதல் தளத்தில் நடனம், திக்குமுக்காட வைக்கும் மதுவிருந்து, காதை பிளக்கும் இசை, ஆட்டம், பாட்டம் எனக் களைகட்டியிருந்த அந்த இரவு விடுதியில் நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர். அப்போது தரைதளத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் தீப்பிழம்பு கிளம்ப, இசைக்குழுவினர் தங்கள் இசையை நிறுத்தினர்.
சுற்றுலா பயணிகள் விவரம் புரியாமல் விழிபிதுங்கியபடி அங்கிருந்து பிழைத்தால் போதும் என ஓட்டம் பிடித்தனர். அதற்குள் மளமளவெனப் பரவிய தீ விடுதியை விழுங்கத் தொடங்கிவிட்டது. குழப்பத்தில் இருந்த சுற்றுலா பயணிகளில் சிலர் சமையல் அறைக்கும், பலர் கிளப்பை விட்டும் ஓடிவிட்டனர். தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், விடுதியில் பரவிய தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
அர்போரா ஆற்றின் உப்பங்கழியில் அந்த விடுதி அமைந்திருந்ததாலும், குறுகிய அணுகு சாலை இருந்ததாலும் மீட்பு பணி கடினமாக இருந்ததாகத் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். அங்குப் பலத்த தீக்காயங்களுடன் சிதறிக் கிடந்த உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாலை 1.30 மணியிலிருந்து 2 மணிக்குள் இந்த விபத்து நடந்த நிலையில், 25 பேர் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், கோவா சுற்றுலா வரலாற்றில் முதல்முறையாக இவ்வளவு பெரிய தீ விபத்து நிகழ்ந்திருப்பதாகக் கவலை தெரிவித்தார். முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களின் 4 பேர் சுற்றுலா பயணிகள் என்றும், எஞ்சியவர்கள் அனைவரும் விடுதியின் ஊழியர்கள் என்றும் தெரியவந்திருப்பதாக முதலமைச்சர் கூறினார்.
காயமடைந்த மேலும் 6 பேருக்குச் சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய அவர், விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தநிலையில் விடுதிக்கு யார் அனுமதி அளித்தது, என்னென்ன அனுமதிகளை பெற்றுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விடுதி உரிமையாளருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மேலாளர் உள்பட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதி பனை ஓலைகளால் ஆன கட்டுமானத்தைக் கொண்டிருந்ததே தீ வேகமாகப் பரவக் காரணம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
















