தெற்கு எத்தியோப்பியைத் தாக்கும் கொடிய மார்பர்க் வைரஸ் தொற்று நோய் குறித்து நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவும், நெரிசலான பகுதிகளை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு எத்தியோப்பியாவில் பரவும் மார்பர்க் என்ற கொடிய வைரஸ் மனிதர்களை தாக்குவதன் மூலம் 50 சதவிகித மரணத்தை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் அது கொடிய வைரஸ் என்ற வகையில் சேர்க்கப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ், புதிய பெருந்தொற்றுக்கு வழிவகுத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் உலக சுகாதார நிறுவனம் அதன் பரவலைஉன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
எத்தியோப்பியாவின் தெற்கு ஓமோ மண்டலத்தில் மார்பர்க் வைரஸ் தாக்குதலுக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். 73 பேருக்கு வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்த 349 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், எத்தியோப்பியாவில் உள்ள சவுதி தூதரகம் தனது குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ள பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் சவுதி தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. நெரிசலான பகுதிகளைத் தவிர்த்து, தேவையற்ற சமூக தொடர்புகளைக் குறைப்பதுடன், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி நிலவரப்படி, எத்தியோப்பிய சுகாதார அதிகாரிகள் ஆய்வக சோதனை மூலம் மொத்தம் 13 மார்பர்க் வைரஸ் பாதிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக, இவற்றில் எட்டு வழக்குகள் மரணத்தில் முடிந்துள்ளன, இது வைரஸின் அதிக இறப்பு விகிதத்தை எடுத்துக்காட்டுகிறது. மார்பர்க் வைரஸ் காற்றின் மூலம் பரவாது என்றாலும், பாதிக்கப்பட்ட நபரை தொடுவதன் மூலமோ, அவர்களது உடைமைகள், ரத்தம், உமிழ்நீர், சிறுநீர், போன்றவற்றின் மூலமோ மற்றவர்களுக்குநேரடியாகப் பரவக்கூடியதுது. இந்த வைரஸ் தாக்கினால் அறிகுறிகள் 2 முதல் 20 நாட்களுக்குள் தெரியும்.
அதீத காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, தசை வலி, கடுமையான வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, ஈறுகள், மூக்கு, கண்களில் இருந்து ரத்தக் கசிவு, உடலில் அரிப்பு இல்லாத தடிப்புகள் போன்றவை இதன் அறிகுறிகள் என்று கூறும் மருத்துவர்கள், தொடக்கத்தில் மலேரியா அல்லது டெங்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளை கொண்டிருப்பதால் மார்பர்க் வைரஸ் தாக்கத்தை கண்டறிவது எளிது அல்ல என்று தெரிவிக்கின்றனர்.
இது வெளிநாட்டு தூதரகங்கள் மத்தியில் கவலையை எழுப்பியுள்ளது. இதன்காரணமாகப் பல்வேறு நாடுகளும் தங்களது குடிமக்களுக்கு எச்சரிக்கை வழங்கியுள்ள நிலையில், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மார்பர்க் வைரஸ் காற்றின் மூலம் பரவாது என்ற தகவல் ஒருவகையில் தற்காப்புநடவடிக்கையாகப் பார்க்கப்பட்டாலும்ம், பொதுமக்கள் சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது, பாதுகாப்பை தரும் என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்து.
















