இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த வந்தே மாதரம் பாடல் தான் 2047ம் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகவும் ஊக்கமும் ஆற்றலும் அளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வந்தே மாதரம் பாடலின் ஆன்மாவின் ஒருபகுதியாக இருந்த சில முக்கிய வரிகளை நீக்கி, நாட்டின் பிரிவினைக்குக் காங்கிரஸ் வித்திட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய தேசபக்திப் பாடலான வந்தே மாதரம் முதல்முறையாக 1875ம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி வங்க தரிசனம் என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது. பின்னர், 1882-ஆம் ஆண்டு அவர் எழுதிய புகழ்பெற்ற ஆனந்தமடம் நாவலிலும் வந்தே மாதரம் பாடல் இடம்பெற்றது. ஆங்கிலேயர்களின் தேசிய பாடலான God Save the Queen என்ற பாடலுக்கு மாற்றாகவே இப்பாடலை சட்டர்ஜி இயற்றியிருந்தார். பாரத பண்பாடு, தேசிய அரசியல் மற்றும் கலாசார உணர்வுகளின் அடையாளமான இந்தப் பாடல், சுதந்திர இயக்கத்தின் மாபெரும் உந்துசக்தியாக இருந்தது.
நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150வது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஓராண்டு கால கொண்டாட்டங்களை கடந்த நவம்பர் 7ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போதே, 1937ம் ஆண்டு வந்தே மாதரம் பாடலின் சில முக்கியமான வரிகள் நீக்கப்பட்டதால் அதன் ஆன்மா கலைந்து விடப்பட்டதாகவும் அதுவே தேசத்தில் பிரிவினை விதைகளை விதைத்ததாகவும் கூறிய பிரதமர் மோடி, இந்த அநீதி எதற்காகச் செய்யப்பட்டது என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்வது அவசியம் என்றும் பிளவுபடுத்தும் மனநிலை இன்றும் நாட்டுக்குச் சவாலாகவே உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
வந்தே மாதரம் என்ற பாடல் ஒவ்வொரு காலத்திலும் பொருத்தமானது. நம் எதிரிகள் பயங்கரவாதத்தால் நம்மைத் தாக்க முயன்ற போதும், துர்க்கையின் வடிவத்தில் எவ்வாறு எழ வேண்டும் என்பதை இந்தியா உலகுக்கு காட்டியது. தாய் நாட்டை மீட்பதற்கான கருவியாக இருந்த வந்தே மாதரம் பாடல், கடந்த 1896ம் ஆண்டு, கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் பன்னிரண்டாவது மாநாட்டில் ரவீந்திர நாத் பாடிய பின்னர் பிரபலமடைந்தது. அம்மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய ரஹ்மத்துல்லாஹ் சயானி வந்தே மாதரம் பாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
வங்கத்தில் சுதேசி போராட்டத்தின் போது, வந்தே மாதரம் பாடல் ஒரு சக்திவாய்ந்த தேசிய முழக்கமாக ஒலித்தது. பெரும்பாலும் நாடு முழுக்க தேசிய எதிர்ப்பு இயக்கப் பேரணிகளில் இப்பாடல் பாடப் பெற்றன. 1939ம் ஆண்டு ஜனவரியில் ஒரு வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே தேசிய பாடலாகக் காந்தி அறிவித்துத் தீர்மானத்தைக் கையோடு வந்தார். “தாயே வணங்குகிறேன்”எனத் தொடங்கும் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்கள் தேசத்தை ஒரு தாயாகவர்ணித்துப் புகழ்கிறது.
அடுத்தடுத்த நான்கு சரணங்கள் துர்க்கா தேவியே பாரத தாயாக இருந்து நாட்டை காப்பாற்றுகிறாள் என்று புகழப் படுகிறது. குறிப்பாக நான்காவது சரணமத்தில் பாரத மாதாவை நோக்கி, நீயே துர்கா, நீயே புனிதப்பெண், நீயே ராணி துர்க்கா தேவியின் தாக்கும் கைகளாலும், வாள்களாலும், தாமரையாலும் அலங்கரிக்கப்பட்ட லட்சுமி நீயே என்று போற்றுகிறது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியலமைப்புச் சபை, ஜன கண மனவுடன் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே இந்தியாவின் தேசியப் பாடலாக அறிவித்தது.
வந்தே மாதரம் பாடலின் நான்கு சரணங்களை நீக்கிய காங்கிரசின் செயலே பிரிவினைக்கு விதையானது. தொடர்ச்சியாக 2006ம் ஆண்டில், ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்ற முஸ்லீம் அமைப்பு பொதுச் செயலாளர் மௌலானா மஹ்மூத் மதானி, எந்த ஒரு முஸ்லிமும் தன்னை ஒரு உண்மையான விசுவாசி என்று கருதினால் ‘வந்தே மாதரம்’ பாட முடியாது என்று கூறினார். 2009 ஆம் ஆண்டில், தியோபந்தில் வந்தே மாதரம் பாடுவதற்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்கள் ஒரு ஃபத்வாவை வெளியிட்டனர்.
இந்த சுழலில் தான், வந்தே மாதரத்தின் 150 வது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் நடந்த சிறப்பு விவாதத்தைத் தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, வடக்கிலிருந்து தெற்கு வரையிலும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும் தேசத்தை ஒன்றிணைத்த வந்தே மாதரம் பாடல், மீண்டும் பாரதத்தை ஒன்றிணைந்து இணைந்து பயணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
வந்தே மாதரம் பாடல் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்ற ஊக்குவிக்கும் என்றும் தேசத்தை சுயசார்புடையதாகவும், வளர்ச்சியடைந்ததாகவும் மாற்றுவதற்கான உறுதியை அளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
















