பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மாணவிக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஜீன் ராஜன் என்ற மாணவி பட்டம் பெற மறுத்தார்.
தொடர்ந்து துணை வேந்தரிடம் இருந்து பட்டம் பெற்ற நிலையில், மாணவிக்கு எதிராக தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில் துணை வேந்தரிடம் இருந்து மாணவி பெற்ற பட்டம் செல்லாது எனக்கூறி அதனை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல என கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்வதற்காக வரும் 18ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
















