திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால், நில அளவைக்கல் என்ற பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை திருநாளன்று தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை இருமுறை உத்தரவிட்டும், தமிழக அரசு அதனை செயல்படுத்த முன்வரவில்லை.
இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மலை உச்சியில் உள்ளது தீபத்தூணே அல்ல எனவும், அது வெறும் நில அளவைக்கல் எனவும் தகவல்கள் பரவின.
இந்நிலையில் தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த 1981-ம் ஆண்டு வெளியிட்ட குன்றத்து கோயில்கள் நுாலில் தீபத்துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
அந்த புத்தகத்தின் 129ம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள தீபத்துாண் என்ற தலைப்பில், தீபத்துாண் நாயக்கர் காலத்தை சேர்ந்தது எனவும், நாயக்கர் காலத்து கல்வெட்டும் துாணிலேயே எழுதப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீபத்துாணில் புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம் எனவும், இத்துாணில் கார்த்திகை தோறும் ஊர் மக்கள் விளக்கேற்றி வந்தனர் எனவும் நுாலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் திமுக எம்பி கனிமொழி உட்பட பலரும் செவி வழி செய்திகளை கேட்டு, தீபத்துாணை நில அளவைக்கல் என கூறி வருவது முற்றிலும் தவறு என்பதை தொல்லியல் துறை நூல் உறுதி செய்துள்ளது.
உத்தர காமிக ஆகமம், உத்தரகாரணாஹமம், திருப்பரங்குன்றம் கோயில், வேற்கோட்டம் உள்ளிட்ட நுால்களிலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
















