இன்றைய அறிவியல் வளர்ச்சியில் கல்வி இன்றியமையாத ஒன்று என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நான்காவது ஆண்டு தமிழ் புத்தக திருவிழா வரும் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் துவக்க விழா, பெங்களூரு குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் தலைமையில் நடைபெற்றது. இதில், இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றிப் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து பேசிய அவர், கர்நாடக மாநில தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தமிழ் புத்தக திருவிழா நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்களிடம் வாசிப்பு தன்மை குறைந்து வரும் காலத்தில் இது போன்ற விழா நடத்துவது சாலச் சிறந்தது எனவும் தெரிவித்தார்.
மேலும், இன்றைய அறிவியல் வளர்ச்சியில் கல்வி இன்றியமையாத ஒன்று எனவும், இளைஞர்கள், மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், லெமூரியா அறக்கட்டளை நிறுவன தலைவர் குமணராசன், அரிமா சங்க தலைவர் மோகன், வாசன் கண் மருத்துவமனை நிறுவனர் ஹர்ஷவர்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
















