விருத்தாச்சலத்தில் திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மறுமுளைப்பு தன்மை ஏற்பட்டும், பூசணம் பிடித்தும் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் எருமனூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி சேமிப்புக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாகத் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 94 ஆயிரம் நெல் மூட்டைகள் மறு முளைப்பு தன்மை ஏற்பட்டும், பூசணம் பிடித்தும் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
போதிய பாதுகாப்பு இல்லாமல் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டதாலும், அரிசி ஆலைகளுக்கு நெல் மூட்டைகளை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதாலும் நெல்மணிகள் சேதமடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், அலட்சியமாகச் செயல்பட்ட நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















