சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் விசா நிபந்தனைகளுக்கு முரணாகச் செயல்பட்டு, காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள பாதுகாப்பு ரீதியாகத் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது உளவு ரீதியாக இந்திய பாதுகாப்பு அமைப்புகளை அச்சுறுத்தும் புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
இந்திய ராணுவத்தின் உளவுப்பிரிவு அண்மையில் சில சந்தேகத்திற்கு இடமான வெளிநாட்டு இணையத் தொடர்புகளைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. அதனைக் கண்காணிக்கத் தொடங்கியபோது சீனாவின் குவாங்டொங் மாகாணத்தைச் சேர்ந்த 29 வயதான, ஹூ காங்தாய் என்ற நபர் சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது.
வாரணாசி, ஆக்ரா, டெல்லி, ஜெய்ப்பூர், சாரநாத், கயா, குஷிநகர் போன்ற குறிப்பிட்ட புத்த மதத்தலங்களுக்கு மட்டும் செல்ல அனுமதியளித்து அவருக்கு விசா அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரோ உரிய அனுமதியின்றி காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற பகுதிகளில் சுற்றித் திரிந்ததை உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
குறிப்பாக லே, ஜான்ஸ்கார் போன்ற ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் அவர் பல நாட்கள் தங்கியிருந்தது ராணுவத்தினருக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. ஜான்ஸ்காரில் தங்கியிருந்தபோது காங்தாய், பல மடாலயங்கள் மற்றும் பாதுகாப்பு ரீதியான சென்சிட்டிவ் பகுதிகளைப் பார்வையிட்டிருந்தார். அதேபோல, காஷ்மீரில் உள்ள ஹவ்ர்வான், அவந்திபுரா, ஹஸ்ரத்பால், சங்கராச்சார்யா மலை, தால் ஏரி மற்றும் முகல் தோட்டம் போன்ற பகுதிகளுக்கு அவர் சென்றதும் ராணுவ அதிகாரிகள் விசாரணையில் அம்பலமானது.
அதனடிப்படையில் ஹூ காங்தாய் என்ற அந்த நபரை தொடர்ந்து இரண்டு வாரங்களாகக் கண்காணித்து வந்த உளவுப்பிரிவினர், அவரை இறுதியாக ஸ்ரீநகரில் உள்ள தங்கும் விடுதியில் சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள், வெளிநாட்டு பயணிகளைப் பதிவு செய்யும் அரசின் விதிகளைப் புறக்கணித்துள்ளனவா என்பது குறித்த விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஹூ காங்தாயிடம் ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவுக்கு வந்தவுடன் காங்தாய் புதிய இந்திய சிம் கார்டு வாங்கியதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து அவரிடம் உளவுப் பிரிவினர் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது செல்போனை ஆய்வு செய்ததில் CRPF படைகளின் நிலை மற்றும் ARTICLE 370 நீக்கம் போன்ற விஷயங்கள் தொடர்பான தேடல்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகையால் விசாரணைக்கு முன் அவர் செல்போனில் இருந்து எதையாவது அழித்துள்ளாரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையம் அருகில் உள்ள ஹும்ஹாமா காவல் நிலையத்தில் வைத்து ஹு காங்தாயிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்தியா வந்ததன் நோக்கம் சுற்றுலா மட்டுமா அல்லது உளவு ரீதியிலான தொடர்புகள் சார்ந்ததா என்பதை அறிய அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் தளங்கள், ராணுவ முகாம்கள் மற்றும் பிற முக்கிய அமைப்புகள் நிறைந்த பகுதிகள் என்பதால், அங்கு வெளிநாட்டவர்கள் அனுமதியின்றி நுழைவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் எனத் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெளிநாட்டு பயணிகளுக்கான விசா விதிகள் மேலும் கடுமையாக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















