திருப்பரங்குன்றம் வழக்கில் தலைமைச் செயலாளர், ஏடிஜிபி ஆகியோர் வரும் 17 ஆம் தேதி காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாதது தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கோரிய மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், அதனால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர்.
இதையேற்ற நீதிபதி திருப்பரங்குன்றம் வழக்குத் தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்துரிமை தொடர்பானதும் கூட எனத் தெரிவித்தார். பின்னர் வழக்கு தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஏடிஜிபி இருவரும் டிசம்பர் 17 ஆம் தேதி காணொலி வாயிலாக ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல் கோயில் செயல் அலுவலர், மதுரை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிபதி ஆணையிட்டார். மேலும் வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை 3 ஆவது எதிர் மனுதாரராகச் சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
















