மனித கண்ணியத்தை நிலைநிறுத்துவதில் நம்பிக்கை கொண்ட ராஜாஜியின் நீடித்த பங்களிப்புகளை நாடு நன்றியுடன் நினைவுகூர்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரரும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ராஜாஜியின் பிறந்த நாளையொட்டி குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தொலைநோக்கு பார்வையாளரான ராஜாஜியின் பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொது வாழ்க்கையை தனது தெளிவான சிந்தனையாலும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பாலும் வடிவமைத்த ஞானம் கொண்ட அரசியல்வாதி ராஜாஜி என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், நேர்மை, அறிவு மற்றும் தேச சேவைக்காக பாடுபடுபவர்களுக்கு அவரது வாழ்க்கையும் மரபும் ஒரு வழிகாட்டும் ஒளியாகத் தொடர்கின்றன என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதேபோன்று, எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரப் போராட்ட வீரர், சிந்தனையாளர், அறிவு ஜீவி, அரசியல்வாதியுமான ராஜாஜியின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மதிப்பை உருவாக்குவதிலும், மனித கண்ணியத்தை நிலைநிறுத்திய ராஜாஜியின் பங்களிப்பை நாடு நினைவுகூர்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், ராஜாஜியின் ஆவணக் காப்பகங்களில் உள்ள சில சுவாரஸ்யமான விஷயங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
















