மும்பை விமான நிலையத்தில் கடந்த எட்டு நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாத போதைப்பொருள், தங்கம், வைரம் உள்ளிட்ட கடத்தல் பொருட்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
மும்பை விமான நிலைய சுங்கத்துறை, சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த டிசம்பர் 3 முதல் 10ம் தேதி வரை பல கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத கடத்தல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாகச் சுமார் 43 கோடி ருபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான ஆயிரத்து 256 கிராம் தங்கம் மற்றும் 87 லட்சம் மதிப்பிலான வைரங்களையும் சுங்கத்துறையினர் பிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் போதைப்பொருள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரே வாரத்தில் இத்தனை பெரிய கடத்தல் சம்பவங்களை மும்பை விமான நிலைய சுங்கத்துறையினர் தடுத்துள்ளது, பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
















