தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கிடையேயான எல்லை மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இரு நாடுகள் இடையேயான பிரச்னை, கடந்த ஜூலை மாதத்தில் மோதலாக வெடித்து ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 43 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோர் முயற்சியால் இரு நாடுகளிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இருப்பினும், எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், தாய்லாந்து வீரர்கள் கண்ணி வெடியில் சிக்கி காயமடைந்ததை அடுத்து அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த தாய்லாந்து அரசு, அமைதி ஒப்பந்தத்தைக் காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்ததை அடுத்து, மீண்டும் மோதல் தீவிரமடைந்தது. மீண்டும் இரு நாடுகளும் ஒருவரையொருவர் தாக்கத் தொடங்கின.
இதன் காரணமாக எல்லையில் வசிப்பதற்கு ஏற்றச் சூழலற்றுப் போனதால், அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.
தாய்லாந்தில் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேரும், கம்போடியாவில் அறுபதாயிரம் பேரும் வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
















