மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து ஏழு பேரை தாக்கிய சிறுத்தை, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது.
மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள பார்டி பகுதிக்குள் சிறுத்தை புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. ஊருக்குள் சிறுத்தை புகுந்ததால் பீதியடைந்த மக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அழைப்பைத் தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சிறுத்தை ஏழு பேரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில், உள்ளூர் மருத்துவமனையின் ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிறகு அங்கு வந்த வனத்துறையினர், ஒரு வீட்டின் அருகே குறுகலான இடத்தில் தஞ்சமடைந்திருந்த சிறுத்தையைக் கண்டுபிடித்தனர். அப்போது சிறுத்தையை மீட்க முயன்ற வனத்துறையினரையும் அது தாக்க முற்பட்டது.
எனவே உடனடியாக அதன் மீது இரண்டு மயக்க ஊசிகளை செலுத்திய வனத்துறையினர், சிறுத்தையைப் பிடித்து கூண்டில் அடைத்தனர்.
இந்த மீட்பு நடவடிக்கையில் மூன்று ஊழியர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பிடிபட்ட சிறுத்தை மேல் சிகிச்சை மற்றும் கண்காணிப்பிற்காக TTC மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
















