தாய்லாந்து தப்பியோடிய கோவா கேளிக்கை விடுதி உரிமையாளர்களை, இன்டர்போல் உதவியுடன் அம்மாநில போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
நாட்டையே உலுக்கிய கோவா கேளிக்கை விடுதி தீ விபத்து சம்பவத்தில், அதன் உரிமையாளர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடிய நிலையில், அவர்கள் எப்போது கைது செய்யப்படுவர் என்ற குரல் பல்வேறு தரப்பில் இருந்தும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்டர்போல் உதவியை நாடியுள்ள கோவா போலீசார், தாய்லாந்தில் பதுங்கியுள்ள லுத்ரா சகோதரர்களைப் பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோவா மாநிலத்தின் அர்போரா பகுதியில் செயல்பட்டு வந்த Birch by Romeo Lane எனப்படும் இரவு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், சமையல் ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 25 பேர் உயிரிழக்க, விடுதியின் தலைமை மேலாளர், பார் மேலாளர் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால், கேளிக்கை விடுதி நடத்தி வந்த சவுரப் – கௌரவ் லுத்ரா சகோதரர்கள், விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே நாட்டை விட்டுத் தப்பி தாய்லாந்தில் தஞ்சம் புகுந்தனர்.
அதாவது, நள்ளிரவு 12.04 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக FIR பதியப்பட்டுள்ள நிலையில், அன்று காலை 5.30 மணியளவில் சவுரப் – கௌரவ் லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்து தப்பியது தெரியவந்துள்ளது. டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் தாய்லாந்தின் புகெட்டுக்கு தப்பியோடிய அவர்கள், அங்கு இன்டர்போல் கண்ணில் சிக்காதவாறு தலைமறைவாக இருப்பதாகத் தெரிகிறது. சவுரப் – கௌரவ் லுத்ரா சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பதற்கு முன்னரே, அவர்கள் தாய்லாந்து சென்றதால், இருவரையும் கைது செய்வதில் தாமதம் நீடிக்கிறது. டெல்லியில் உள்ள ஒரு முகவரியை வைத்தே, 42 நிறுவனங்களை நடத்தியதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், அதுவும் தற்போது சவுரப் – கௌரவ் லுத்ரா சகோதரர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தற்போதைய சூழலில் கேளிக்கை விடுதி செயல்பட்டு வந்த கட்டடத்தின் உரிமையாளர் சுரிந்தர் குமார் கோஷ்லாவும், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். சுரிந்தர் குமார் கோஷ்லா பிரிட்டன் குடியுரிமை பெற்றிருப்பதால், அவர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சவுரப் – கௌரவ் லுத்ரா சகோதரர்களை கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் இன்டர்போல் உதவியை நாடியுள்ளதால், அவர்கள் இருவரும் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் எனக் கோவா டிஐஜி வர்ஷா சர்மா தெரிவித்துள்ளார். கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறுகையில், 25 பேரின் உயிரிழப்புக்கு நிச்சயம் தனது அரசு நியாயம் தேடி தரும் எனத் தெரிவித்துள்ளார். சவுரப் – கௌரவ் லூத்ரா சகோதரர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டால், கோவா போலீசார் நேரடியாக தாய்லாந்து செல்வதற்கும் வழிவகை செய்யப்படும் என உறுதிப்பட கூறியிருக்கிறார்.
















