அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததென தெரிவித்துள்ளார். இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பேசியதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், பிராந்தியம் மற்றும் சர்வதேச முன்னேற்றம் குறித்து விவாதித்ததாக கூறியுள்ளார்.
உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இருநாடுகளும் இணைந்து பணியாற்றும் எனவும் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் விற்கப்படும் இந்தியப் பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் ஏற்கனவே 50% வரி விதித்த நிலையில், இரு நாட்டு வர்த்தகத்துறை அதிகாரிகள் இடையே முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் அதிபர் டிரம்பை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி கலந்துரையாடி இருப்பது அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி வணிகம் மற்றும் வர்த்தக ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
















