திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி உத்தரவுக்கு எதிராக, திமுக கொண்டு வந்துள்ள கண்டனத் தீர்மானம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக திமுக கொண்டு வந்த பதவி நீக்க தீர்மானமானது, அரசியலமைப்புச் சட்டத்தை முரணான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கான முயற்சி என குற்றஞ்சாட்டினார்.
இது நாட்டின் நீதித்துறையின் மீதும், நீதிபதிகளின் நடுநிலைமையின் மீதும் தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதல் என்றும், நீதித்துறையின் சுதந்திரத்தை முடக்க திமுக அரசும், அதற்கு ஆதரவளிக்கும் இண்டி கூட்டணி கட்சிகளும் தீர்மானத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாக கூறினார். இந்த நடவடிக்கை அவர்களின் இந்து மத விரோதப் போக்கைக் காட்டுவதுடன், நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான அவர்களின் வெறுப்பையும் காட்டுவதாக தெரிவித்தார்.
நெருக்கடி நிலை காலத்திலும் காங்கிரஸ் கட்சி நீதிபதிகளின் நியமனத்தை நிராகரித்ததாகவும், நீதித்துறையின் நடுநிலைமை என்ற புனிதமான கொள்கையை மீறியதாகவும் குறிப்பிட்டார். மேலும், திமுக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
















