அசாமில் மக்கள் நம்பும் கொள்கை மற்றும் கருத்தியலே, அவர்களின் வாக்குகளை தீர்மானிப்பதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
அசாம் முதலமைச்சராக உள்ள ஹிமந்த பிஸ்வ சர்மா, பிரபல தனியார் தொலைக்காட்சி ஊடகத்தின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது மக்களின் வாக்கு பணத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறதா அல்லது திட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறதா என அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, பணமோ, திட்டங்களோ மக்களின் வாக்கை தீர்மானிப்பதில்லை எனவும், அவர்கள் நம்பும் கொள்கை மற்றும் கருத்தியலே மக்களின் வாக்கைத் தீர்மானிப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு உதாரணமாக “மியா முஸ்லீம்” சமூகத்தினரை குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா, கொள்கைக்கு உட்படவில்லையென்றால் தான் 10 ஆயிரம் அல்ல ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அவர்கள்தன்னை ஆதரிக்கமாட்டார்கள் எனக் கூறினார்.
மேலும், அசாமில் முஸ்லீம் மக்கள் தொகை அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், 2021-ல் 38 சதவீதமாக இருந்த அவர்களின் எண்ணிக்கை, 2027-க்குள் 40 சதவீதமாக உயர வாய்ப்பிருப்பதை சுட்டிக்காட்டினார்.
இந்த எண்ணிக்கை 50 சதவீதத்தை கடக்கும் பட்சத்தில், அது பிற சமூகத்தினரை பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
















