திமுக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது எத்தனை சுதந்திர போராட்ட வீரர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது என வ.உ.சி.யின் பேத்தி மரகதம் மீனாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, தமிழகத்தில் வடமாநில சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களில் சாலைகள், மருத்துவமனைகள் உள்ளது என்றும், ஆனால், வட இந்தியாவில் வஉசி உள்ளிட்டோரின் பெயரில் சாலை உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாகப் பொள்ளாச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வ.உ.சி.யின் பேத்தி மரகதம் மீனாட்சி, தமிழகத்தின பெருமைகளை பிரதமர் மோடி வெளிநாடுகளில் பேசி வருவதாகவும், அதனை அறிந்து கொள்ள முடியாத தமிழக அரசு குறைகூறி கொண்டு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
திமுகவினர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது எத்தனை சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறுகளை பள்ளி பாடப்புத்தகத்தில் வைத்தனர் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், வந்தே மாதரம் சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி வ.உ.சி., மற்றும் பாரதியார் குறித்து பேசியதற்கு மரகதம் மீனாட்சி நன்றி தெரிவித்தார்.
















