விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு நிலத்தை யார் பயன்படுத்துவது என்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
கீழ் நிமிலி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான பாஸ்கர் என்பவரும், வடநெற்குணம் கிராமத்தை மூர்த்தி, மணிகண்டன், ஏழுமலை உள்ளிட்ட 5 பேரும் அரசுக்குச் சொந்தமான நிலத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதனையடுத்து, பாஸ்கர் பயன்படுத்தி வரும் 20 சென்ட் அரசு நிலத்தில் புதிதாக ஒரு வழியை ஏற்படுத்தித் தர வேண்டுமெனத் திண்டிவனம் தாசில்தாரிடம் 5 பேரும் மனு அளித்தனர். இதற்குப் பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இதனிடயே, நிலத்தில் இருந்து விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வேண்டும் எனப் பாஸ்கர், ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் மற்றும் அவரது மனைவியிடம் மூர்த்தியின் மனைவியும் மணிகண்டனின் மனைவியும் தகராறு செய்துள்ளனர்.
இதில், ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கைகளால் தாக்கிக் கொண்டதால் பாஸ்கர், அவரது மனைவி உட்பட நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















