அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் ஜனநாயகமும் இல்லாமல், வங்கதேசம் திக்கு தெரியாத திசையை நோக்கிச் செல்வதாகக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஏற்படுத்திய சிக்கல்களால், அந்நாட்டின் எதிர்காலம் கணிக்க முடியாததாக உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஆண்டு ஜூலை ஜூலை மாதம் வங்க தேச மாணவர்கள் வேலைவாய்ப்பு ஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியது. நாடெங்கும் வன்முறை வெடித்தது. இதில் போராட்டத்தை அடக்கும் ஆற்றல் பெற்றிருந்த வங்க தேச இராணுவம், அமெரிக்கா மற்றும் அந்நிய சக்திகளின் தூண்டுதலால் நடுநிலை வகித்தது.
வேறுவழியில்லாமல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு வங்க தேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப் பட்டது. அரசு பொறுப்பேற்ற உடனேயே முகமது யூனுஸ் நாட்டின் அரசியலமைப்பு, தேர்தல் நடத்தும் முறை, அரசு நிர்வாகம் ஆகியவற்றில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவர முடிவு செய்தார்.
இது தொடர்பாக வரைவு திட்டத்தை இடைக்கால அரசு உருவாக்கியது. இது ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசின் அரசியல் கட்டமைப்பை அடிப்படையாக முற்றிலுமாக நிராகரிக்கும் திட்டமாகும். இதற்கிடையே, வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில்,கடந்த 15 ஆண்டு கால ஷேக் ஹசீனா ஆட்சியில் நடந்த மனித உரிமை மீறல் குற்றங்களுக்கான வழக்கில் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி, ஷேக் ஹசீனாவை குற்றவாளி என அறிவித்த தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.மேலும் ஊழல் குற்றச்சாட்டில் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது இக்கட்டான இச்சூழலில், அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளின் கைப்பாவையாக முகமது யூனுஸ் செயல்படுகிறார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பாகிஸ்தானும் சீனாவும் தங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே சீனா தனது Belt and Road திட்டத்துக்காகச் சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலரும், வங்க தேச உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக 14 பில்லியன் டாலரும் முதலீடு செய்துள்ளன. ISI-யின் தலைவர், கடற்படை தலைவர் எனப் பாகிஸ்தானின் ராணுவமும் வங்கதேசத்துக்கு அடிக்கடி வந்து செல்கிறார்கள். வங்க தேச விமானப்படை விமானிகளுக்குப் பாகிஸ்தானில் போர் விமானப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் சைஃப் நல்லெண்ணப் பயணமாகச் சிட்டகாங்கில் நிறுத்தப்பட்டுள்ளது. வங்க தேச இராணுவமும், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாகவே அறிய முடிகிறது. நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் மோசமான சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் வங்கதேசத்தின் கடன் அளவு அதிகரித்துக் கொண்டே போவதாக IMF தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, தன்னை அவமானப்படுத்தியதாகவும், ஓரங்கட்டியதாகவும் குற்றம்சாட்டியுள்ள அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைத் தடை செய்த முகமது யூனுஸ் அக்கட்சியின் தலைவர்களைச் சிறையில் அடைத்தார். மற்றொரு பெரிய கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் உடல் நிலை மோசமாக இருப்பதால் அக்கட்சியும் தீவிரமாகச் செயல்பட முடியாமல் உள்ளது.
அக்கட்சி தேர்தலில் போட்டியிட்டாலும், ஜமாத் – இ – இஸ்லாமி என்ற அடிப்படைவாத இஸ்லாமிய கட்சிக்கே முகமது யூனுஸ் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார் என்ற குற்றஞ்சாட்டும் எழுந்துள்ளது. வங்கதேசம் ஒரு ஜனநாயக நாடாக இருக்குமா ? மீண்டும் இராணுவ ஆட்சி வருமா ? பயங்கரவாத சக்திகளின் கைகளில் சிக்குமா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
















