மக்களால் 100 நாள் வேலைவாய்ப்பு என அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றவுள்ளது.
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் நாடு முழுவதும் சுமார் 15 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டத்துக்கு முதலில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டது.
பின்னர் அது 2009-ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தின் பெயரை பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கார் யோஜனா எனப் பெயர் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதற்கான மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய மசோதா மூலம் வேலைவாய்ப்பு நாட்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரிவாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக கூடுதலாக 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்வதற்கான பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
















