கன்னியாகுமரி அருகே அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
நாகர்கோவிலை சேர்ந்த ஜீவா என்பவர், மின்வாரிய பெண் அதிகாரி கீதாவின் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் மின்வாரியத்தில் ஓட்டுநர் பணி வாங்கி தருவதாக ஜீவாவிடம், கீதா கூறியுள்ளார்.
மேலும் தான் மாவட்ட திமுக மகளிரணி தலைவராக உள்ளதாகவும் ஜீவாவிடம் கீதா கூறியுள்ளார். இதனை நம்பிய ஜீவா, 2 கட்டங்களாக 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இதேபோல் ஏராளமானோர் கீதாவிடம் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பல மாதங்களாகியும் வேலை கிடைக்காததால் பணம் கொடுத்தவர்கள் மின்வாரிய அதிகாரி கீதாவிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் சரிவரப் பதிலளிக்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
















