தமிழகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பெண்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. அரசின் ஒவ்வொரு நிகழ்வுகளும் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமாக இருப்பதோடு, அதற்குத் தொடர்பில்லாத திரைபிரபலங்கள் முன்னிலைப்படுத்துவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் பெண் உயர் அதிகாரிகள் மேடையில் ஏற்றப்பட்டு கவுரவிக்கப்பட்ட நிலையில், நிகழ்வுக்கு எந்தவகையிலும் தொடர்பில்லாத சத்யராஜ் உள்ளிட்ட திரைபிரபலங்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. எப்போதாவது கலந்து கொண்டிருந்த திரை பிரபலங்கள் அண்மைக்காலங்களில் எப்போதுமே கலந்து கொண்டிருப்பதால், தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் அரசு நிகழ்ச்சிகளா அல்லது சினிமா நிகழ்ச்சியா என்ற சந்தேகத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் விளம்பரத்திற்கு பஞ்சமிருக்காது என்ற விமர்சனங்கள், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரின் போது மேலும் வலுவடையத் தொடங்கின. செஸ் ஒலிம்பியாட்டிற்கான விளம்பரத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நடித்திருந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த விளம்பர பாடலுக்கு மட்டும் பல கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக அரசு நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் திட்டங்களை விட விளம்பரம் மேலோங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாகப் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு எனும் நிகழ்வில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பல்வேறு நடிகர்களும், இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.
மாணவி ஒருவரை மேத்ஸ் டீச்சர் என அழைத்து முதலமைச்சர் பேனா கொடுத்த நிகழ்வு பெரியளவில் பேசப்படும் எனக் கருதப்பட்ட நிலையில், காலையில் வைத்த சாம்பாரை இரவு நேரத்தில் சுவைத்து பார்த்துப் பேசிய காட்சிகள் தான் சமூகவலைதளங்கள் முழுவதும் வைரலாகின. அதன் தொடர்ச்சியாகத் தற்போது ஈழத் தமிழ் மகள் சாரா எனும் பெயரில் மற்றொரு நாடகம் அரங்கேறியுள்ளதாக விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன.
எது எப்படியாக இருந்தாலும் அரசு நிகழ்ச்சி என்றால் அதில் குறைந்தபட்சம் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதன் பின்னணியில் சில திரைமறைவு அழுத்தங்கள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பில்லாத சூழல், பணிநிரந்தரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண் தூய்மைப் பணியாளர்கள், அரசுப் பள்ளி வகுப்பறைக்குள்ளாகவே மாணவிகள் மது குடிக்கும் அளவிற்கான அவலநிலை தமிழகத்தில் தொடரும் நிலையில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதால் பெண்களின் பொருளாதாரம் முன்னேறிவிட்டதாகத் தமிழக அரசு கூறிவருவது ஏமாற்றுவேலை என அரசியல் கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதான கடமையாக இருக்கும் போது, கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் செயல்படுத்தக் கூடிய திட்டங்களை விட, அதனை விளம்பரத்திற்காக பயன்படுத்தக் கூடிய சிந்தனை மேலோங்கியிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திமுக ஆட்சியின் எஞ்சிய காலத்திலாவது விளம்பர மோகத்தை குறைத்து மக்களுக்கு பயனளிக்கக் கூடிய திட்டங்களை தொடங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற குரலும் வலுக்கத் தொடங்கியுள்ளது.
















