சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
மத்திய சிரியாவில் உள்ள பால்மைரா பகுதியில் அமெரிக்க மற்றும் சிரிய படைகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூட்டுப் படையை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அமெரிக்காவை சேர்ந்த 2 வீரர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில், பதில் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதி கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுப்போம் எனக் கூறினார்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கர்களை உலகில் எங்குக் குறிவைத்தாலும் வேட்டையாடப்படுவீர்கள் எனவும் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















