கென்யாவில் காட்டு யானையின் தும்பிக்கை அதன் தந்தத்தாலேயே காயமடைந்து 3 நாட்களுக்கு மேலாக அவதியடைந்து வந்த நிலையில் வனத்துறையினர் சரிசெய்து சிகிச்சை அளித்துள்ளனர்.
உலகளவில் உள்ள யானைகளில் கென்யாவில் வாழக் கூடிய யானைகள் தனித்துவமாகக் காணப்படுகின்றன. மேற்கு கென்யாவின் எல்கான் மலையில் உள்ள யானைகள், குகைகளுக்குள் சென்று சுவர்களைத் தோண்டி உப்பு எடுக்கும் தனித்துவமான பழக்கத்தைக் கொண்டுள்ளன.
சாவோ யானைகள் பெரிய தந்தங்களைக் கொண்டுள்ளதால் உலகளவில் புகழ்பெற்றுள்ளன. இந்நிலையில் சாவோ வனவிலங்குப் பகுதியில் காட்டு யானை ஒன்று அதன் நீளமான தந்தத்தால் காயமடைந்து அவதிப்பட்டு வந்தது.
யானையின் தும்பிக்கை அதன் தந்தத்தால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் 3 நாட்களாகச் சாப்பிட முடியாமலும், தண்ணீர் குடிக்க முடியாமலும் யானை சிரமப்பட்டு வந்தது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தந்தத்தில் சிக்கிய யானையின் தும்பிக்கை அகற்றி சிகிச்சை அளித்தனர்.
















