பாஜக-வின் தேசிய செயல் தலைவராகப் பீகார் அமைச்சர் நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பின்னணி என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
பீகாரில் உள்ள பங்கிபூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, பாஜக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் நிதின் நபின்.
பின்னரும் அதே தொகுதியில் போட்டியிட்ட நிதின் நபினை, மக்கள் தொடர்ந்து 5 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தனர்.
2008-ம் ஆண்டு பாஜக தலைமை அவரை பாரதிய ஜனதா யுவ மோர்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் நியமித்தது.
பின்னர் நிதின் நபின் தனது அயராத உழைப்பால் 2010 – 2016-ம் ஆண்டு காலகட்டத்தில், பாரதிய ஜனதா யுவ மோர்சாவின் தேசிய பொதுச்செயலாளர் பொறுப்புக்கு உயர்ந்தார்.
தொடர்ந்து 2016 – 2019 காலகட்டத்தில் அவர் பாரதிய ஜனதா யுவ மோர்சாவின் பீகார் மாநில தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
நிதின் நபினுடைய அர்ப்பணிப்பு நிறைந்த பணியை உணர்ந்த கட்சி தலைமை, கடந்த 2021-2024-ம் ஆண்டு வரை அவரை சத்தீஸ்கர் மாநில இணை பொறுப்பாளராகவும், பின்னர் சத்தீஸ்கர் மாநிலத்தின் பொறுப்பாளராகவும் நியமித்துக் கவுரவித்தது.
இந்நிலையில், தற்போது பீகார் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் நிதின் நபினை, கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமித்துப் பாஜக நாடாளுமன்ற குழு அறிவித்துள்ளது.
















