பாகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டு வருவது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
உலகின் மிகப் பழமைவாய்ந்த மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம். வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள் உள்ளிட்ட அனைத்து அம்மொழியில்தான் இயற்றப்பட்டுள்ளன. அத்துடன், சமஸ்கிருதம் செம்மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் சமஸ்கிருதத்தை கற்பித்து வருகின்றன.
3 மத்திய பல்கலைக்கழகங்களும், ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகமும், 14 மாநில பல்கலைக்கழகங்களும் சமஸ்கிருத பாடத்தைக் கற்பிக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் சமஸ்கிருதத்தை பயில முடியும். இப்படி, இந்தியாவிலும், பிற நாடுகளிலும் சமஸ்கிருதம் பாடத்திட்டமாக இருப்பது இயல்பானதுதான். ஆனால், இஸ்லாமிய நாடான பாகிஸ்தானிலும் சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுதான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களுள் ஒன்று, லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம்.
பாகிஸ்தானில் உள்ள பலர் சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதை கருத்தில்கொண்டு, இந்தப் பல்கலைக்கழகம் அம்மொழியை கற்றுக்கொடுத்து வந்தது. ஆனால், தொடக்கத்தில் 3 மாத கோர்ஸாக மட்டுமே சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டது. அதுவும், வார இறுதிகளில் மட்டும்தான் வகுப்புகள் நடைபெறும். இதனால், பாகிஸ்தானில் முழுநேரமாகச் சமஸ்கிருதம் கற்பதென்பது இயலாகக் காரியமாக இருந்து வந்தது.
இந்நிலையில்தான், மாணவர்கள் அளிக்கும் அதிக ஆதரவு காரணமாக, முழுநேர பாடத்திட்டமாகச் சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது லாகூர் பல்கலைக்கழகம். சுதந்திரத்திற்கு முன்பு, சமஸ்கிருத கல்வியின் மையமாக லாகூர் இருந்ததாகவும், லாகூர் பல்கலைக்கழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமஸ்கிருத கையெழுத்து பிரதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், 1947ம் ஆண்டு பிரிவினைக்குப் பின்பு, இந்தச் சமஸ்கிருத பிரதிகள் மீதான ஆய்வு நிறுத்தப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான், லாகூர் பல்கலைக்கழகத்தில் தற்போது மீண்டும் சமஸ்கிருத கல்வி தொடங்கப்பட்டுள்ளது. பார்மன் கிறிஸ்டியன் கல்லுாரியில் சமூகவியல் இணை பேராசிரியராகப் பணியாற்றும் ஷாஹித் ரஷீத் என்ற பேராசிரியர் இந்தப் பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளார். செம்மொழிகள் மீதான ஆர்வம் காரணமாக முதலில் அரபு மற்றும் பாரசீக மொழிகளை அவர் கற்றார். பின்னர், சமஸ்கிருதம் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக, கேம்பிரிட்ஜ் பேராசிரியரான ஆண்டோனியா ரூப்பலிடமும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்கோமாஸ் டெய்லரிடம் அம்மொழியை பயின்றார்.
இவர்தான், பாகிஸ்தானில் 3 மாத சமஸ்கிருத கோர்ஸை கொண்டுவந்தவர். முழுநேர சமஸ்கிருத பாடத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஷாஹித் ரஷீத், சமஸ்கிருதம் என்பது ஒரு மதத்துடன் மட்டும் பிணைக்கப்பட்ட மொழியல்ல எனவும், அது ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் இணைக்கும் மொழி எனவும் கூறினார். சமஸ்கிருதம் மலை போன்றது என வர்ணித்த அவர், அம்மொழியை அனைவரும் சொந்தம் கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் உள்ளவர்கள் அரபு மொழியையும், பாகிஸ்தானில் உள்ளவர்கள் சமஸ்கிருத்தையும் பயில வேண்டும்.
அவ்வாறு பயின்றால், மொழிகள் தடையாக மாறுவதற்கு பதிலாகப் பாலங்களாக மாறும் எனவும் பேராசிரியர் ரஷீத் குறிப்பிட்டார். சமஸ்கிருத மொழியியலின் தந்தையாகக் கருதப்படுபவர் பாணினி. இவர் பிறந்த இடம் தற்போது பாகிஸ்தானில்தான் உள்ளது. இதனை பெருமையாகக் கருதுவதாக கூறும் லாகூர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், பகவத் கீதை, மகாபாரதம் உள்ளிட்டவற்றையும் விரைவில் கற்பிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
இதன் விளைவாக, அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் பாகிஸ்தானிலும் சமஸ்கிருத அறிஞர்களை பார்க்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டிருப்பது, அம்மொழியின் சிறப்பிற்கு மேலும் ஒரு அங்கீகாரமாக அமைந்துள்ளது.
















