100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் வேலை திட்டமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், அந்தத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஊதிய பகிர்விலும் மற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன. அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2005ம் ஆண்டு ஊரக வேலை உறுதி சட்டம் கொண்டு வரப்பட்டது. 2009ம் ஆண்டு, அந்தத் திட்டத்தின் பெயர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
100 நாள் வேலை திட்டம் என இது அழைக்கப்பட்டாலும், அண்மைக்காலமாகப் பணியாளர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படவில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2024-25ம் நிதியாண்டில் ஒரு குடும்பத்திற்கு சராசரியாகச் சுமார் 50 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு சுமார் 41 லட்சம் குடும்பங்கள் மட்டுமே 100 நாட்கள் முழுமையாகப் பணியாற்றியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை இந்தாண்டு 7 லட்சமாகக் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 100 நாள்வேலை திட்டத்தை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு சில சீர்திருத்தங்களை கொண்டு வர முடிவெடுத்துள்ளது. அதன்படி, திட்டத்தின் பெயரை பூஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் என மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்போதுள்ள நடைமுறையின்படி, தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக 100 நாட்களுக்குதான் வேலை வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசு கொண்டு வரவுள்ள மசோதா, மொத்த வேலைநாட்களை 125ஆக உயர்த்தவுள்ளது. அதேபோல், ஊதிய செலவுகளை பகிர்ந்துகொள்வதிலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. பழைய நடைமுறையின்படி, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசுதான் வழங்கி வந்தது. ஆனால், ஊதியத்தொகையை மத்திய அரசும், மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்ளும் வகையில் தற்போது திருத்தம் செய்யப்படவுள்ளது.
அதன்படி, வடகிழக்கு மற்றும் இமயமலையை ஒட்டியுள்ள மாநிலங்கள் மற்றும் குறிப்பிட்ட யூனியன் பிரதேசங்களுக்கான ஊதிய செலவில் 90 சதவீதத்தை மத்திய அரசே வழங்கும். எஞ்சிய 10 சதவீத தொகையை மட்டும் அந்தந்த மாநிலங்கள் வழங்கினால் போதும் எனக் கூறப்படுகிறது. பிற மாநிலங்களுக்கும், சட்டமன்றங்களை கொண்ட யூனியன் பிரதேசங்களுக்கும் 60க்கு 40 என்ற விகிதத்தில் நிதி பகிர்வு இருக்கும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கான முழு ஊதிய தொகையையும் மத்திய அரசே வழங்கவுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தால் விவசாயம் சார்ந்த வேலைகளுக்குப் போதிய அளவில் ஆட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனையும் கருத்தில்கொண்டு, சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. அதன்படி, விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் தற்காலிகமாக 60 நாட்களுக்கு இந்த 125 நாள் வேலைதிட்டம் நிறுத்திவைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. .
அது எந்த 60 நாட்கள் என்பதை, மாநில அரசே முடிவு செய்ய வேண்டும். அந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியில், பணியாளர்களை கொண்டு எந்த புதிய திட்டமும் தொடங்கப்படாது எனவும், முன்னரே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மேற்கொண்டு தொடரப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள 100 நாள் வேலைதிட்டத்தின்படி, 15 நாட்களுக்குள் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
அதனையும் மாற்றி, வார அடிப்படையில் ஊதியம் வழங்கப் புதிய மசோதா வழிவகை செய்கிறது. பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்குச் சாதகமாகவே இந்த அனைத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம், 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள சிக்கல்கள் களையப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
















