சிவகங்கையில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லினக்கத்துடன் மயானங்களில் பணியாற்றி வரும் பட்டதாரி இளைஞர், தனது வாழ்க்கை தரத்தை உயர்த்த மயான பணியை அரசு நிரந்தர பணியாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். பி.ஏ பட்டதாரியான இவர், சிவகங்கையில் உள்ள மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். சசிகுமாரின் தந்தை மயான பணிகளை மேற்கொண்டு வந்ததால், சுற்றுவட்டார பகுதிகளில் அவருக்கு வேலை வழங்க யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனது வருங்காலமும், குடும்பத்தின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாவதை உணர்ந்த சசிகுமார், தனது தந்தை செய்து வந்த மயான பணிகளையே கையிலெடுத்து மேற்கொள்ள முடிவு செய்தார்.
ஆனால் நாளடைவில் அந்த மயான பணிகள் மூலம் கிடைத்த வருமானம் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த சசிகுமார், தானொரு இந்துவாக இருப்பினும் மத நல்லிணக்கத்துடன் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மயானங்களிலும் பணியாற்றத் தொடங்கினார்.
இயற்கை எய்தியவர்களுக்கு மயானத்தில் குழி தோண்டுவது, உடல்களை எரியூட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறும் சசிகுமார், அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்தே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார். சாதி, மத பேதமின்றி சசிகுமார் மேற்கொண்டு வரும் இந்த மயான பணியை, அவரது குடும்பத்தினர் புனிதமான பணியாகவே கருதுகின்றனர்.
இருப்பினும் போதுமான வருமானம் இல்லாத காரணத்தால் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பதாக கூறும் அவர்கள், மயான பணியில் ஈடுபடுவதால் சமுதாயத்தில் தங்களுக்கென்று எந்தவொரு மதிப்பும் இல்லாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சூழலில், தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், சமுதாயத்தில் மயான பணிக்கான மதிப்பை அதிகரிக்கவும், இந்தப் பணியை அரசு நிரந்தர பணியாக மாற்ற வேண்டும் எனச் சசிகுமார் மற்றும் குடும்பத்தார் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு இவர்களின் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு, சமூகத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
















