இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இல்லை என்பதற்கு சா்வதேச அமைப்புகள் அளிக்கும் அங்கீகாரமே சாட்சி என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டதாக கடந்த ஜூலையில் அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்ததற்கு மக்களவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எதிா்க்கட்சிகள் விளக்கம் கோரினா். இதற்கு பதிலளித்துப் பேசிய நிா்மலா சீதாராமன், இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சியை ஒவ்வொரு சா்வதேச அமைப்பும் அங்கீகரிப்பதாக குறிப்பிட்டார்.
சா்வதேச நிதியம், எஸ் அண்ட் பி போன்ற அமைப்புகள் நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து வலுவடையும் என கணித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். நிகழ் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த நிதியாண்டில் பொருளாதாரம் 7.3 சதவீதம் வளா்ச்சியடையும் என ரிசா்வ் வங்கி கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடன்-ஜிடிபி விகிதம் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு 61.4 சதவீதமாக இருந்த நிலையில், மத்திய அரசின் சிறப்பான கொள்கைகளால் 2023-24இல் 57.1 சதவீதமாக குறைந்ததாகவும், நிகழாண்டு இறுதியில் இது 56.1 சதவீதமாக குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கடந்த 2014-15இல் பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 46,000 கோடியாக இருந்த நிலையில் 2023-24இல் ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
இதுமட்டுமின்றி மின்னணு, வாகனங்கள் என பல்வேறு துறைகளிலும் இந்தியா பெரும் வளா்ச்சியை பதிவு செய்து வருவதாகவும், இத்தனை தரவுகள் இந்திய பொருளாதாரம் வளா்ச்சியடைவதாக கூறுகையில் யாரோ ஒருவா் வீழ்ச்சியடைந்ததாக கூறியதை ஏற்கத் தேவையில்லை என்றும் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தினார்.
















