ஆலங்குடி அரசு மருத்துவமனையில் மூச்சு அடைப்பை நீக்கிப் பிராண வாயு செலுத்தும் குழாயை கண்டுபிடித்த தலைமை மருத்துவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வரும் பெரியசாமி என்பவர் மருத்துவத்துறைக்கு பயன்படும் வகையில் பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்துள்ளார்.
உலகளவில் நடைபெற்ற மருத்துவர்கள் மாநாட்டில் பங்கேற்று தனது கருவிகளின் பயன்பாட்டை எடுத்துக்கூறி காப்புரிமை பெற்றுள்ள பெரியசாமி, தேசிய அளவில் 3 விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், பெரிஸ் மூச்சுக் குழாய் என்ற புதிய கருவியை கண்டுபிடித்துள்ள பெரியசாமிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
அறுவை சிகிச்சையின்போது மயக்க நிலையில் உள்ளவர்களுக்கும், சுயநினைவு இல்லாமல் மூச்சடைப்பு ஏற்பட்டவர்களுக்கும் அடைப்பை நீக்கிப் பிராண வாயு செலுத்த பெரிஸ் மூச்சு கருவி பயன்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை அரங்கில் இருக்கும் ஆக்சிஜன் லெவல் மானிட்டரை கண்காணிக்க பல மருத்துவர்கள், பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், பெரிஸ் மூச்சு கருவி இருந்தால் ஒரு மருத்துவரே உயிருக்குப் போராடும் நபருக்குத் தேவையான ஆக்சிஜன் வழங்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், பெரிஸ் மூச்சு கருவியை அனைத்து மருத்துவர்களும் எளிய முறையில் பயன்படுத்த முடியும் எனப் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
















