இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரரான மைக்கேல் வாகன், ஆஸ்திரேலியாவின் சிட்னி போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். எப்படித் தப்பித்தார் என்பது பற்றிச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சிட்னியில் போண்டி கடற்கரை அருகே உள்ள சிறிய பூங்காவில் ஹனுக்கா யூதப் பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட யூத மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி கொண்டிருந்தனர் .
தீடீரென வந்த இரண்டு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 15 பேர் கொல்லப்பட்டனர். 40க்கும் மேற்பட்டோர்ப் படுகாயமடைந்தனர். அதிர்ச்சியடைந்த மக்கள் தலைதெறிக்க ஓடும் காட்சிகளும் மற்றும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் ஒரு பயங்கரவாதி காவல்துறையினர் சுட்டதில் கொல்லப்பட்டார். படுகாயத்துடன் பிடிபட்ட இரண்டாவது பயங்கரவாதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தப் பரபரப்பான திகிலூட்டும் சூழலிலும், தனது உயிரைப் பணயம் வைத்து துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதியை மடக்கிப் பிடித்துள்ளார் பழவியாபாரியான அகமது.
இந்தத் தாக்குதலின் போது அகமதுவுக்கும் இரண்டு இடங்களில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருக்கிறது. அகமது ஒரு உண்மையான ஹீரோ என்று பாராட்டைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது.
இது குறித்து சமூக ஊடகங்களில், பயங்கரவாத தாக்குதலின் போது அருகிலுள்ள ஒரு உணவகத்தில் இருந்ததாகவும், அறைக்குள் ஒளிந்து கொண்டு தாக்குதலிலிருந்து தப்பித்ததாகவும் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இந்தப் பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசிய வாகன், பயங்கரவாதியை மடக்கிப் பிடித்த அகமது அல் அகமதுவின் வீரத்தைப் பாராட்டியுள்ளார். தாம் உட்பட பெரும்பாலான மக்களால் செய்ய முடியாத காரியத்தை அகமது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓடிச் சென்று, துப்பாக்கியால் சுடும் பயங்கரவாதியின் முதுகில் குதித்து ஏறி அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து, அவரைக் கீழே தள்ளிய பிறகும், பயங்கரவாதியைச் சுடாமல், துப்பாக்கியைக் கீழே வைத்த அகமது பாராட்டுக்கு உரியவர் என்றும் கூறியுள்ளார்.
ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதை உணர்வதற்கு முன்பு, முதலில் அது ஒரு சுறா தாக்குதல் என்று நினைத்ததாகவும் மைக்கேல் வாகன் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, சிட்னியில் போண்டி கடற்கரைக்கு அருகே கிழக்கு புறநகர்ப் பகுதியான வேவர்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் (Pat Cummins) பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலியாவில் உள்ள யூத மக்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
போண்டி கடற்கரைப் பயங்கரவாத தாக்குதலால் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும், இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், போண்டி மக்களுக்கும், யூத மக்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும் இன்ஸ்டா பக்கத்தில் பாட் கம்மின்ஸ் பதிவிட்டுள்ளார்.
















