மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரை மாற்றும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் வறுமையை ஒழித்து, வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கடந்த 2005ல் அமல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், 100 நாட்கள் வேலை உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாகப் புதிய சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.இந்நிலையில், மக்களவைக் கூடியதும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாகப் புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது.
இந்தப் புதிய மசோதாவை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகம் செய்தார். இந்தப் புதிய மசோதாவின்படி பெயர் மாற்றத்துடன், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டமாக மாற்றப்பட உள்ளது.
மேலும் திட்டத்திற்காக மாநில அரசு 40 சதவீதம் நிதி வழங்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















