பந்தைச் சரியாக பாஸ் செய்ய முடியாமல் மெஸ்ஸியுடன் விளையாட கிடைத்த அரிய வாய்ப்பைத் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சொதப்பிவிட்டதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கிண்டல் அடித்துள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும் மற்றும் எட்டு முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றவருமான லயோனல் மெஸ்ஸி இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அந்தச் சுற்றுப்பயணத்தின்போது, கொல்கத்தா, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கண்காட்சி போட்டிகளிலும் பங்கேற்று விளையாடினார்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் மெஸ்ஸி-வுடன் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கால்பந்து விளையாடும் வீடியோ காட்சியை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கிண்டல் அடித்துள்ளார்.
அதில், கால்பந்தின் மிகச்சிறந்த வீரரான மெஸ்ஸியுடன் விளையாட முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரால் ஒரு எளிய பாஸ் கூட கொடுக்க முடியாமல், பந்தை அங்குமிங்கும் அடித்து மெஸ்ஸியை ஓடவிட்டு வேடிக்கைப் பார்த்துள்ளார் என்று சிரிப்பு எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவில் இணைந்த மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் என். பிரேன் சிங் கொல்கத்தாவில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பழிவாங்கும்படி ரேவந்த் ரெட்டிக்கு யாரோ சொல்லியிருப்பார்கள் போல,” என்று வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
















