கிரிக்கெட் விளையாட்டில் மாநில அணியிலோ, வயது பிரிவு போட்டிகளிலோ கூட இடம்பிடிக்காத ஒரு வீரர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கவனம் ஈர்த்து 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? இளம் லெக் ஸ்பின்னரான இஸாஸ் சவாரியாவின் இந்த அசாதாரணமான பயணம் குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
இளம் லெக் ஸ்பின்னராக மிளிர்ந்து வரும் இஸாஸ் சவாரியா, கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வட கர்நாடக பகுதியான பிடாரில் பிறந்தார். தந்தை இந்திய விமான படையில் அதிகாரியாக இருந்ததால், இளம் வயதிலிருந்தே அவர் பல இடங்களுக்கு இடம்பெயர வேண்டியிருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு விஜய் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்த அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளராகத் தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார். பின்னர்ப் பயிற்சியாளர்களின் ஆலோசனைகளை ஏற்று தனது பவுலிங் ஸ்டைலை லெக் ஸ்பின்னாக மாற்றிக்கொண்டார்.
அப்போது கர்நாடகா Under-15 அணியில் இடம்பிடிக்க முடியாததால் ஏமாற்றமடைந்த இஸாஸ், கொரோனா காலகட்டத்திற்குப் பின் தனது பயிற்சியை மேம்படுத்த ஜெய்ப்பூருக்கு இடம்பெயர்ந்தார். அங்குள்ள சன்ஸ்கார்க் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்த அவர் விடுதியில் தங்கியிருந்து தனது பயிற்சியைத் தொடர்ந்தார்.
திறம்பட பயிற்சிகளை மேற்கொண்டு நாளுக்குநாள் தனது திறமைகளை வளர்த்து வந்தபோதிலும், இஸாஸுக்கு மாவட்ட அணியில் கூட விளையாட இடம் கிடைக்காதது அவருக்குப் பெரும் வேதனையைத் தந்தது. இருப்பினும் மனம் தளராத இஸாஸ், தனது திறமைகளை அனைவருக்கும் தெரியப்படுத்த புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார்.
அதன்படி, இஸாஸ் அன்றாட பயிற்சிக்குப் பின்னர் தனது பந்துவீச்சை, வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற தொடங்கினார். தொடக்கத்தில் குறைந்த பார்வைகளே கிடைத்தபோதிலும் வீடியோ பதிவிடுவதை மட்டும் இஸாஸ் நிறுத்தவில்லை. இது இப்படியே சென்றுகொண்டிருக்க இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அடில் ரஷீத், இவரது வீடியோவுக்குக் கருத்து தெரிவித்துக் கமெண்ட் பதிவிட்டது இவரது கரியரின் பெரும் திருப்புமுனையாக மாறியது. “நீங்கள் சிறப்பாகப் பந்து வீசுகிறீர்கள்” என்ற ரஷீதின் வார்த்தைகள் இஸாஸுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தன.
அதன் பிறகு, இஸாஸ் சவாரியாவின் இன்ஸ்டா கணக்குக்குப் பின் தொடர்பவர்களும், அவரது வீடியோ ரீல்ஸுகளுக்குப் பார்வைகளும் வேகமாக உயர்ந்தன. அந்தச் சமயத்தில் தான் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அப்போதைய பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த சுனில் ஜோஷி, இஸாஸைத் தொடர்புகொண்டு பேசினார். சென்னைச் சூப்பர் கிங்ஸ் அணியும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர் லக்னோவில் பஞ்சாப் கிங்ஸ் அணி நடத்திய Trials-ல் இஸாஸ் சிறப்பாகச் செயல்பட்டார்.
அதன் பலனாக 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎஸ் தொடரின் ஏலத்தில், Uncapped ஸ்பின்னர்ஸ் பட்டியலில் இஸாஸ் சவாரியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பார்வை இவர் மீது இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
ஐபிஎல் தொடரை நோக்கிய இவரது இந்தப் பயணம் வழக்கத்திற்கு மாறானது என்றாலும், தனித்துவமான தனது பாதைத் தனக்கு மாபெரும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்பதை இஸாஸ் உணர்ந்துள்ளார். இதன் மூலம் சமூக ஊடகம் வாயிலாக நேரடியாக ஐபிஎல் தொடருக்குள் நுழையும் முதல் வீரர் என்ற பெருமையை இஸாஸ் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தனது தந்தை, சகோதரி மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் வழங்கிய ஆதரவே தனக்கு இந்த நிலையை அடைய ஊக்கமளித்ததாக இஸாஸ் சவாரியா தெரிவித்துள்ளார். தனது சொந்தப் பணத்தில் பெற்றோருக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ள இஸாஸ், அந்தக் கனவை நினைவாக்கக் கடுமையான பயிற்சியுடன் முன்னேறி சென்றுகொண்டிருக்கிறார்.
















