திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது குறித்து தேவஸ்தானம் ஏன் முடிவெடுக்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவிற்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.
அப்போது, வக்பு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தர்காவிற்கு சொந்தமான இடத்தில் தூண் அமைந்துள்ளதாகவும், கடந்த கால நீதிமன்ற உத்தரவுகளில் தீபத்தூண் என எதுவும் குறிப்பிடப்பட வில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தர்காவில் இருந்து 15 மீட்டருக்கு அப்பால் தீபமேற்றலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது கோயில் நிர்வாகம் மற்றும் தேவஸ்தானத்தின் பொறுப்பு எனவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், தூண் தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ளதா? தர்காவின் சுற்றுச்சுவரில் இருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்தும் உரிமையியல் தொடர்பான கோரிக்கையில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க இயலுமா? எனவும், மேல்முறையீட்டு மனுக்களில் முன்வைத்த வாதங்களுக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளீர்களா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு புதன்கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலாளர், ஏடிஜிபி ஆஜராக விலக்கு அளிக்க வேண்டுமென அரசு தலைமை வழக்கறிஞர் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்ததார்.
இதனையடுத்து, மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்றும், தற்போதைய சூழலில் உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
















