அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா மாற்றப்பட்டார். இந்நிலையில் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின் பேரில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கக் குழு அமைத்துச் சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கில் மாநிலங்களவை தலைவருடன் கலந்தாலோசிக்காமல், ஓம் பிர்லா தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாக வாதிடப்பட்டது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் இரு அவைகளும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
















