பெங்களூருவில் நடந்த ஒரு துயரச் சம்பவம் மனிதாபிமானத்தின் குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
தெற்கு பெங்களூருவின் பாலாஜி நகரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடரமணனுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடரமணனை மருத்துவமனைக்கு அவரது மனைவி பைக்கில் அழைத்துச் சென்றார். ஆனால், அங்கிருந்த தனியார் மருத்துவமனையோ மருத்துவர் இல்லை எனக்கூறி மனிதாபிமானமின்றிக் கதவை மூடியது.
அடுத்ததாகச் சென்ற மருத்துவமனையில் மாரடைப்பு உறுதி செய்யப்பட்டும், முதலுதவி அளிக்காமல் வேறு மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என ஆம்புலன்ஸ் கூட வழங்காமல் அந்தத் தம்பதியை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.
மீண்டும் பைக்கிலேயே அடுத்த மருத்துவமனைக்குச் செல்ல முயன்றபோது, உடல்நலக் குறைவால் வெங்கடரமணன் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, உயிருக்குப் போராடும் கணவனை மடியில் கிடத்திக்கொண்டு, அந்தப் பெண் கைகூப்பி கதறி அழுதப்படி அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டார்.
உதவிக்கு ஆளின்றி அந்தப் பெண் தன் கணவரின் முகத்தைத் தடவி அழுவதும், மீண்டும் வாகனங்களை நோக்கி ஓடுவதுமாக இருந்தார். இறுதியாக ஒரு வாடகைக் கார் ஓட்டுநர் உதவியுள்ளார். ஆனால், அந்த இடைப்பட்ட நிமிடங்களில் வெங்கடரமணனின் உயிர்ப் பிரிந்துவிட்டது.
தங்களுக்கு உதவ இந்தச் சமூகம் மறுத்தபோதும், அந்தத் துயரமான சூழலில் வெங்கடரமணனின் குடும்பத்தினர் ஒரு உன்னதமான முடிவை எடுத்தனர். வெங்கடரமணனின் கண்களைத் தானம் செய்தனர்.
















