சேலம் அம்மாப்பேட்டைக் கோயில் கல் மண்டபங்களை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டுமென அறநிலையத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இக்கோயில் கல் மண்டபங்கள் புனரமைக்கப்படாததால் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகக் கூறி ஆனந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பரதச் சக்ரவரத்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறைச் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கல் மண்டபங்களைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
இதனைக் கேட்ட நீதிபதி, கோயிலுக்குச் சொந்தமான இரு கல்மண்டபங்களையும் பழமை மாறாமல் விரைந்து புனரமைத்து, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.
















