ஆராய்ச்சியாளர் ஒருவரின் டைரியில் குறிப்பிடப்பட்டிருந்த உயிரினம், இருநூறு ஆண்டுகள் கழித்து நீலகிரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளரான பியர் சோனராட் என்பவர், கடந்த 1813-ஆம் ஆண்டு புதுச்சேரியில் வித்தியாசமான மூஞ்சுறு போன்ற உயிரினத்தைப் பார்த்துள்ளார். அதனை அப்போதே தனது டைரியில் ஓவியமாக வரைந்து வைத்துள்ளார்.
பின்னாளில் அவர் இறந்த பிறகு, அவருடைய குறிப்புகள் அனைத்தும் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும், சோனராட் நினைவாக இந்த உயிரினத்திற்குச் சோனரூட் ஷ்ரூ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த உயிரினம் தற்போது உயிருடன் இல்லை என நம்பப்பட்டு வந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு உதகைப் படகு இல்லம் அருகே இறந்த நிலையில் ஒரு சோனராட் ஷ்ரூ கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது உதகைச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த வகை உயிரினங்கள் வாழ்ந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு தரப்பில் அனுமதியும், நிதியுதவியும் கிடைத்தால் இந்த உயிரினம் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
















