சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறையவைத்தது. கடந்த 14-ம் தேதி ‘ஹனுக்கா விழா’ நடந்துகொண்டிருந்தபோது அங்கு வந்த சஜித் அக்ரம் மற்றும் அவரது மகனான நவீத் அக்ரம் ஆகியோர், அங்கிருந்த பொதுமக்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு சிறுமி உட்பட 16 பேர்ப் பரிதாபமாக உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர்ப் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின்போது போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சஜித் அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், குண்டு பாய்ந்த காயங்களுடன் கைது செய்யப்பட்ட நவீத் அக்ரமுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தாக்குதலை பயங்கரவாத செயல் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்குத் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்தத் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சஜித் அக்ரம், இந்தியாவின் தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தெலங்கானா மாநில போலீசாரும் உறுதி படுத்தியுள்ளனர். ஹைதராபாத்தில் வணிகவியல் பட்டம் முடித்த சஜித் அக்ரம், 1998-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளார்.
இந்தியாவில் இருந்தவரை அவர் மீது எந்தவிதக் குற்றப்பின்னணியும் இல்லை எனவும், கடந்த ஆண்டுகளில் குடும்பத்தினருடன் மிகக் குறைந்த தொடர்பே அவர் மேற்கொண்டிருந்ததாகவும் போலீசார்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா சென்ற பிறகு அவர் இந்தியாவிற்கு வெறும் 6 முறை மட்டுமே வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள போலீசார், அதுவும் சொத்துக்கள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் வயதான பெற்றோரைச் சந்திப்பதற்காக மட்டுமே என்பதையும் விளக்கியுள்ளனர். மேலும், அவரது பயங்கரவாத சிந்தனைகளில் இந்தியாவுக்கோ அல்லது தெலங்கானாவுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் போலீசார்த் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, சஜித் மற்றும் நவீத் அக்ரம் சமீபத்தில் பிலிப்பைன்ஸ் சென்றிருந்த நிலையில், அங்கு அவர்களுக்குப் பயங்கரவாத பயிற்சிகள் அளிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதைச் செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியா முழுவதும் தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மிகக் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் உள்ள ஆஸ்திரேலியாவில் இத்தகைய தாக்குதல் நடந்துள்ளது, அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் துப்பாக்கி கட்டுப்பாடு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
















