ஜோர்டான் பயணத்தின்போது அந்நாட்டு இளவரசர் 2-ம் அப்துல்லா, பிரதமர் மோடிக்காகக் கார் ஓட்டி சென்றது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜோர்டான் இளவரசர் குறித்த செய்தி தொகுப்பு ஒன்றைத் தற்போது காணலாம்.
இந்தியா – ஜோர்டான் இடையேயான தூதரக உறவுகளின் 75 ஆண்டுகளை நினைவுகூறும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். தலைநகர் அம்மான் சென்றடைந்த அவருக்கு ஜோர்டான் பிரதமர் ஜாஃபர் ஹசன் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை வரவேற்ற ஜோர்டான் பட்டத்து இளவரசரான இரண்டாம் அப்துல்லா, பிரதமர் மோடியைத் தனது காரில் அமரவைத்து அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார்.
பட்டத்து இளவரசரான ஹுசைன் பின் அப்துல்லா அல்-ஹாஷிமி, கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி ஜோர்டான் தலைநகர் அம்மானில் பிறந்தார். 1921-ம் ஆண்டு முதல் ஜோர்டானை ஆட்சி செய்து வரும் ஹாஷிமைட் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஜோர்டான் மன்னரான 2-ம் அப்துல்லாவுக்கும், ராணி ரானியாவிற்கும் பிறந்த மூத்த மகனாவார். இவருக்கு 3 உடன்பிறப்புகள் உள்ளனர்.
ஜோர்டானில் தனது கல்வியைத் தொடங்கிய பட்டத்து இளவரசர் ஹுசைன், 2012-ம் ஆண்டு கிங்ஸ் அகாடமியில் தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர், 2016-ம் ஆண்டு ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வலராற்றில் பட்டம் பெற்றார். தொடர்ந்து 2017-ம் ஆண்டு பிரிட்டன் சென்ற அவர், சாண்ட்ஹர்ஸ்டில் உள்ள ராயல் அகாடமியில் ராணுவ பயிற்சியையும் முடித்தார். இந்நிலையில், அவர் தற்போது ஜோர்டானிய ஆயுதப்படைகளில் மேஜராகப் பணியாற்றி வருகிறார். 2023-ம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி, இளவரசி ராஜ்வா அல்-சயீஃபைத் திருமணம் செய்துகொண்டார்.
2009-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி வெளியான அரசாணையின் மூலம், ஹுசைன் பின் அப்துல்லா அல்-ஹாஷிமி, ஜோர்டானின் பட்டத்து இளவரசராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் அரசப் பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பட்டத்து இளவரசர் என்ற அடிப்படையில் மன்னர் 2-ம் அப்துல்லாவுடன் இணைந்து பல அரசு பயணங்களையும், ஏராளமான ராணுவ பணிகளையும் மேற்கொண்டுள்ள ஹுசைன், ஐநா பொதுச்சபை, ஐநா பாதுகாப்பு கவுன்சில், ஐநா காலநிலை மாநாடு, உலகப் பொருளாதார மன்றம் போன்ற முக்கிய சர்வதேச மேடைகளில் ஜோர்டானைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
இதுமட்டுமின்றிக் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில், தனது 20-வது வயதில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அமர்வைத் தலைமையேற்ற உலகின் இளைய நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்நிலையில், தற்போது கிரௌன் பிரின்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவராக உள்ள ஹுசைன், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி, அறிவியல், மனிதாபிமானம் மற்றும் இளைஞர் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
அவரது முயற்சியின் பலனாகக் கடந்த 2018-ம் ஆண்டு ஜோர்டானின் முதல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் சூழலில் ஜோர்டான் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, பட்டத்து இளவரசர் ஹுசைன் வரவேற்று உபசரித்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களைப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இந்த நிகழ்வு இந்தியா மீது ஜோர்டான் மக்கள் வைத்துள்ள மரியாதையைப் பிரதிபலிக்கிறது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















