வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான அரசை வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. வெனிசுலா அரசுக்கு எதிராக இத்தனைக் கடுமையான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கக் காரணம் என்ன? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
அமெரிக்கா – வெனிசுலா இடையேயான பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெனிசுலாவில் நிக்கோலஸ் மதூரோ தலைமையிலான அரசு ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனவும், அங்கு தேர்தல் முறைகேடுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருவதே இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
அதேபோல, உலகின் பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ள வெனிசுலாவின் எண்ணெய் வருவாய், மதூரோவின் ஆட்சியைத் தொடரப் பயன்படுத்தப்படுவதாக கூறும் அதிபர் டிரம்ப், பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் அந்த வருவாய் பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக மாறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அதனடிப்படையில் வெனிசுலாவுக்கு எதிராகப் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும், அரசியல் அழுத்தங்களையும் அமெரிக்கா அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவின் இந்தச் செயலை கடுமையாக எதிர்த்து வரும் வெனிசுலா அரசு, உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும், பொருளாதாரத் தாக்குதல்கள் மேற்கொள்வதையும் அமெரிக்கா கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், வெனிசுலா அரசுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் மேலும் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். குறிப்பாக மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசை வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வெனிசுலாவின் அனைத்து எண்ணெய் டாங்கர்களையும் முழுமையாகத் தடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், வெனிசுலாவில் இருந்து எண்ணெய் கடத்தலை முற்றிலும் நிறுத்த அமெரிக்கக் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அத்துடன், அமெரிக்கச் சொத்துக்களை திருடியதுடன், தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற குற்றங்களில் மதுரோ அரசு ஈடுபட்டுள்ளதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிபர் டிரம்பின் உத்தரவால் வரலாறு காணாத மிகப்பெரிய அமெரிக்கக் கடற்படை அணி வெனிசுலாவை முழுமையாகச் சுற்றிவளைத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து திருடிய எண்ணெய், நிலம் மற்றும் பிற சொத்துக்களை வெனிசுலா அரசு திருப்பி ஒப்படைக்கும் வரை இந்த அழுத்தம் தொடரும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியாகும் முன்னரே வெனிசுலா கடற்கரை அருகே ஒரு எண்ணெய் டாங்கரை அமெரிக்கப் படைகள் கைப்பற்றிப் பறிமுதல் செய்தன. அதில் வெனிசுலா மற்றும் ஈரானிலிருந்து வந்த தடைச் செய்யப்பட்ட எண்ணெய் கொண்டு செல்லப்பட்டதாக அமெரிக்க நிர்வாகம் தரப்பில் தெரிவித்தது.
அதன் காரணமாகப் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெயை, அமெரிக்கா தக்கவைத்துக்கொள்ளும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீப காலமாக மதுரோவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வெனிசுலா நிறுவனங்கள் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், கரீபியன் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ இருப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டும் கரீபியன் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கப் பி-1 லாஞ்சர்க் குண்டுவீச்சு விமானங்களும் வெனிசுலா கடற்கரை அருகே பறந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரோ அரசு மேற்கொண்டு வரும் போதைப்பொருள் மற்றும் எண்ணெய் கடத்தலைத் தடுப்பதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என அமெரிக்க அதிகாரிகள் கூறி வந்தாலும், கரீபியன் கடற்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பது அமெரிக்கச் செனட் சபையின் கவனத்தைப் பெற்றுள்ளது. மொத்தத்தில், அமெரிக்கா – வெனிசுலா இடையேயான மோதல் தற்போது அரசியல் மற்றும் பொருளாதார அளவிலிருந்து ராணுவ அழுத்த நிலைக்கு நகர்ந்துள்ளது. மதூரோ அரசு சரணடையாத வரைத் தடைகள் மற்றும் அழுத்தங்கள் தொடரும் என அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இந்தப் பதற்றம் மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவே சர்வதேச அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.
















