திருவண்ணாமலையில் உள்ள தீப மலையில் பிராயசித்த பூஜை விமரிசையாக நடைபெற்றது.
நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாட்டப்பட்டது. கடந்த 3ம் தேதி 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள் இந்த தீபம் ஏற்றப்பட்டு ஜோதி பிழம்பாய் அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
மலையையே சிவனாகவும், சிவனே மலையாகவும் கருதுவதால் அக்னி மலைக்கு பிராயசித்த பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி அண்ணாமலையார் கோயிலில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு யாகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து புனித நீரை மலை உச்சிக்கு கொண்டு சென்று அண்ணாமலையார் பாதத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு பிராயசித்த பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
















