திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, விசாரணைக்கு மாநகர காவல் ஆணையர், துணை ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரிலும், தலைமைச் செயலாளர் காணொலி வாயிலாகவும் ஆஜராகினர்.
அப்போது, தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக இரு நீதிபதிகள் அமர்வில் அவதூறாக பேசியது ஏன்? என வழக்கறிஞர் விகாஸ் சிங்கிடம் நீதிபதி சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார்.
பின்னர், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? என்ற கேள்விக்கு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை இருப்பதாகக் கூறிய தலைமைச் செயலாளரிடம் குறுக்கிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது எனக் கூறினார்.
மேலும், திண்டுக்கல், கன்னியாகுமரி வழக்குகளிலும் தனது உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை சுட்டுக்காட்டிய நீதிபதி, தலைமைச் செயலரின் கோரிக்கையை ஏற்று பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம் வழங்கினார்.
மேலும், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், கோவில் நிர்வாக அதிகாரி என அனைவரும் ஜனவரி 9ம் தேதி ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.
















