பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் மனிதாபிமானமற்ற உளவியல் சித்திரவதைகள் அளிக்கப்படுவதாக அவரது மகன்கள் காசிம் மற்றும் சுலைமான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள இந்த விவகாரம் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமராகப் பதவி வகித்தவர் இம்ரான் கான். பதவி காலத்தின்போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றதால் பதவி நீக்கப்பட்டார். அதன் பிறகு தனது அரசியல் எதிரிகளையும், ராணுவத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்த இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
குறிப்பாக ‘அல்-காதிர் நம்பிக்கை நிதி’ மோசடி தொடர்பான வழக்கில் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே 7 மாதங்களுக்கு மேலாகக் குடும்பத்தாருடன் தொடர்பில் இல்லாமல் இருந்த இம்ரான் கான், சிறைக்குள்ளேயே படுகொலை செய்யப்பட்டதாகச் செய்தி பரவிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது அவரது குடும்பத்தார் மற்றும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை நேரில் சந்திக்க குடும்பத்தில் ஒருவருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியது.
அதன்படி, இம்ரான் கானின் சகோதரி உஸ்மா கான் அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில், சிறைக்குள் சென்று அவரை நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இம்ரான் கான் உயிருடன் இருப்பதாகவும், ஆனால் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்குப் பலவிதமான சித்திரவதைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழ்நிலை குறித்து, அவரது மகன்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். லண்டனில் வாழ்ந்து வரும் அவரது முதல் மனைவி ஜெமிமா கோல்டுஸ்மித்தின் மகன்களான காசிம் கான் மற்றும் சுலைமான் இஸா கான் ஆகியோர், கடந்த 2 ஆண்டுகளாக இம்ரான் கான் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய அவர்கள், ராவல்பிண்டியில் உள்ள ஆடியாலா சிறையில், தங்கள் தந்தை மிகவும் கீழ்த்தரமாக மனிதாபிமானமற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
இதுகுறித்து விவரித்த காசிம் கான், ஹெபடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயிலுள்ள கைதிகளுக்கிடையே தங்கள் தந்தை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குக் குடிக்க மிகவும் அசுத்தமான தண்ணீர் வழங்கப்படுவதாகவும் கூறினார். இதனால் தங்கள் தந்தையை மீண்டும் காண முடியாமல் போகலாம் என்ற நிலை உருவாகியுள்ளதாகக் காசிம் தனது அச்சத்தை வெளிப்படுத்தினார். வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தான் செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான விசா விண்ணப்பம் இன்னும் பரிசீலலனை நிலையில் இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்தார். நேர்காணலில் பேசிய மற்றொரு மகனான சுலைமானும், இம்ரான் கான் முழுமையாக மனித தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சிறை காவலர்கள் கூட அவருடன் பேச அனுமதிக்கப்படாத நிலை உள்ளதாகக் கூறிய அவர், சில நேரங்களில் அவரது தனிமை சிறைக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இவை அனைத்தும் சர்வதேச மனித உரிமை விதிமுறைகளை மீறிய செயல்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவரும், நீண்டகால தனிமைச் சிறை தண்டனை, சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரானது என பாகிஸ்தான் அரசை எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதிநிதி முஷரஃப் சயீதி, இம்ரான் கானின் மகன்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். கடந்த 860 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கானை வாரத்திற்கு ஒருமுறை சந்திக்க அனுமதி உள்ள நிலையில், இதுவரை 870 முறை குடும்பத்தாருடனான சந்திப்பு நடந்துள்ளதாக அவர் விளக்கியுள்ளார். இதனால் சிறையில் உள்ள இம்ரான் கானின் உண்மை நிலை என்ன என்பதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், அவரது உடல்நலம், பாதுகாப்பு மற்றும் அடிப்படை மனித உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் வலுத்துள்ளது.
















