காசாவில் நிலைநிறுத்தப் படவுள்ள சர்வதேச படையில் இணைய பாகிஸ்தான் தங்களின் ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசிம் முனீரின் இந்த முடிவு, உள்நாட்டில் அரசியல் குழப்பத்தையும் அசிம் முனீருக்கு எதிரான எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நீண்ட ஆண்டுகளாக நீடித்த வந்த இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் ட்ரம்ப், 20 அம்ச அமைதி திட்டத்தை முன் மொழிந்தார். அதன் மூலம், காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமைதியை உறுதி செய்யச் சர்வதேச படை உருவாக்கப்பட்டு காசாவில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
அமெரிக்காவின் திட்டத்தின்படி, காசாவில் சர்வதேச நாடுகள் அடங்கிய அமைதிப் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் என்று கூறப் பட்டுள்ள நிலையில், ஹமாஸ் அமைப்புக்கும் பாலஸ்தீன விடுதலைக்கும் ஆதரவாக இருக்கும் இஸ்லாமிய நாடுகள் இந்தச் சர்வதேச அமைதிப்படையை எதிர்க்கின்றன. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முழுமையாக அகற்றும் நோக்கத்துடனேயே, இந்த அமைதிப் படை செயல்படும் என்று பெரும்பாலான முஸ்லீம் நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
எகிப்தில், பாகிஸ்தான் பீல்டு மார்ஷலும் முப்படைகளின் தலைவருமான அசிம் முனீர் இஸ்ரேல் உளவுத்துறை மற்றும் அமெரிக்க உளவுத் துறையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து, காசாவுக்கான சர்வதேச படையில் பாகிஸ்தான் இணைய உள்ளது. இது சம்பந்தமாக, முஸ்லிம் தலைவர்கள் குழு ஒன்று அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பேச்சு நடத்தியதையடுத்து , பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் காசாவுக்கு பாகிஸ்தான் , சுமார் 20,000 இராணுவ வீரர்களை அனுப்புவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒரு இராணுவ வீரருக்குச் சுமார் 8.86 லட்சம் சம்பளம் கேட்டதாகவும், ஆனால் இஸ்ரேல் 8000 ரூபாய் மட்டுமே வழங்க முன்வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்பின் காசா அமைதி திட்டத்தை முதலில் எதிர்த்த பாகிஸ்தான் ட்ரம்பின் மிரட்டலுக்குப் பயந்து ‘ யு – டர்ன்’ அடித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுவரை இஸ்ரேலை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்காத பாகிஸ்தான், காசாவுக்குத் தன் வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதன் மூலம் இஸ்ரேலுக்கு மறைமுகமாக உதவுகிறது.
ஈரான், துருக்கி மற்றும் கத்தார் போன்ற ஹமாஸின் தீவிர ஆதரவு முஸ்லிம் நாடுகள் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தானின் இந்த முடிவு இஸ்லாமிய உலகத்துக்குப் பாகிஸ்தானின் பச்சைத் துரோகம் என்று கருதப்படுகிறது. இதனால் இந்த நாடுகள் பாகிஸ்தானை தனிப்படுத்தக்கூடும். கடந்த சில வாரங்களாக, இந்தோனேசியா, மலேசியா, சவுதி அரேபியா, துருக்கி, ஜோர்டான், எகிப்து மற்றும் கத்தார் போன்ற நாடுகளின் ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்திய அசிம் முனீர், அடுத்த வாரம் அமெரிக்காவுக்குச் சென்று அதிபர் ட்ரம்பைச் சந்திக்க உள்ளார்.கடந்த ஆறு மாதங்களில் அசிம் முனீர் அமெரிக்கா செல்வது இது மூன்றாவது முறையாகும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கைகளில் பாகிஸ்தானை ஒரு பகடை காயாக ஒப்படைத்துள்ள அசிம் முனீரூக்கு உள்நாட்டில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கடுமையாக எதிர்க்கும் பாகிஸ்தானின் இஸ்லாமியக் கட்சிகள் அசிம் முனீருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஏற்கெனவே முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சிறைத்தண்டனையும் அதைத் தொடர்ந்த பிடிஐ கட்சியின் போராட்டங்களும் தொடர்கின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முப்படைகளின் தலைவராக இருக்கும் அசிம் முனீர் தனது ஃபீல்ட் மார்ஷல் பட்டத்தை என்றென்றும் தக்கவைத்துக் கொள்ளும் அதிகாரமும் பெற்றுள்ளார்.
மேலும் எந்தவொரு குற்றவியல் வழக்கிலிருந்தும் வாழ்நாள் முழுவதும் விலக்கு பெறும் ஒரே நபராக இருக்கும் அசிம் முனீர் வரம்பற்ற அதிகாரமும் அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாப்பும் பெற்றுள்ளார். எனவே பாகிஸ்தானின் தனது உத்தரவுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில், காசா அமைதி படையில் சேர்வது பெரும் சிக்கலை உருவாகியுள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தை இஸ்லாமிய நலன்களின் பாதுகாவலராக காட்டும் அசிம் முனீர், இஸ்ரேலுடன் படையில் பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ப்பது மிகவும் ஆபத்தான முடிவாகும்.
















