திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் நரிமேடு மருதுபாண்டியர் தெரு பகுதியை சேர்ந்த பூர்ண சந்திரன் என்பவர், மருந்து விற்பனை பிரதிநிதியாகவும், அவ்வப்போது சிறிய சரக்கு வாகனம் மூலமாக பழங்கள் விற்பனை செய்தும் வந்துள்ளார். இந்நிலையில், மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் இருக்கும் பெரியார் சிலை அருகே பூர்ணசந்திரன் தான் ஓட்டிவந்த சரக்குவாகனத்தை நிறுத்திவிட்டு அங்குள்ள போலீஸ் பூத்திற்குள் சென்று தனது உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்துள்ளார்.
தகவலறிந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தபோதும் இளைஞர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், இளைஞர் பூர்ண சந்திரன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பருக்கு செல்போன் மூலமாக ஆடியோ அனுப்பியது தெரியவந்தது.
















